வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

புதுச்சேரி: சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கான சிறப்பு முகாம் ஓட்டுச்சாவடி மையங்களில் இன்றும், நாளையும் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன் அறிவிப்பு:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, இன்றும் (9ம் தேதி), நாளையும் (10ம் தேதி) நடக்கிறது.

இதைத் தொடர்ந்து வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. அதன்படி, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பணியிலிருக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருப்பதுடன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்த படிவங்களை பெற்று கொள்வார்.

சிறப்பு முகாம் நாட்களில் வாக்காளர்கள் தங்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று தங்களுடைய பெயர் மற்றும் இதர விவரங்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும், வாக்காளர் உதவி மையச் செயலி மூலமாகவும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement