தேர்வாய்கண்டிகையில் நீர் எடுத்து ஆவடி குடிநீர் பிரச்னை தீர்க்க முடிவு - படம் வேண்டாம்
ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம், சத்திரம், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் நேரு, மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.
அதேபோல், தமிழக காலநிலை மாற்றத்திற்கான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 98.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் மற்றும் 59.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 137.79 கி.மீ., நீளத்திற்கு விடுபட்ட 13,916 வீடுகளுக்கு குடிநீர் விரிவாக்க திட்ட பணிகளை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் இருந்து ஆவடி மாநகராட்சிக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், அப்போது அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.