வேகத்தடையில் மாயமான வர்ணம் தொடர் விபத்தால் மக்கள் அச்சம்

ஊத்துக்கோட்டை:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட உள்ளன.

ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இச்சாலை வழியே பயணிக்கின்றன.

தினமும், 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலையில், விபத்துகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு பகுதியிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

வேகத்தடை உள்ளதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது. ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் இடையே, 36 கி.மீட்டர் துாரத்திற்கு, 50க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன.

இவை அமைத்து, நான்கு ஆண்டுகளுக்கு மேலானதால், வெள்ளை வர்ணம் மறைந்தது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பகுகின்றன. சில மாதங்களுக்கு முன் தாராட்சியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் சாலையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement