கால்நடை மருத்துவமனை பாழ் விவசாயிகள், ஊழியர்கள் அச்சம்
ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், லட்சிவாக்கம் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு ஒரு மருத்துவர், ஒரு உதவியாளர் பணியில் உள்ளனர்.
இந்த மருத்துவமனை வாயிலாக லட்சிவாக்கம், பாலவாக்கம், சூளைமேனி, சென்னங்காரணி, செங்கரை, தண்டலம், தொளவேடு, காக்கவாக்கம் உள்ளிட்ட, 11 ஊராட்சிகளைச் சேர்ந்தோர், தங்களின் கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர்.
இக்கிராமங்களைச் சேர்ந்த 3,200 மாடுகள், 1,800 ஆடுகளுக்கு இங்கு பொது சிகிச்சை, சினை ஊசி, சினை பரிசோதனை, தடுப்பூசி, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. இக்கட்டடம் 2014ம் ஆண்டு கட்டப்பட்டது.
தற்போது, 20 ஆண்டுகளான நிலையில், கட்டடத்தின் உறுதிதன்மை கேள்விக்குறியாக உள்ளது. ஆங்காங்கே கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், மேல் பகுதியில் புற்கள் வளர்ந்துள்ளன. மேலும், மழை பெய்தால் நீர்க்கசிவு ஏற்படுகிறது.
மழைக்காலம் துவங்கிய நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவற்றை இடித்து அகற்ற வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
இங்கு பணியாற்றும் மருத்துவர், உதவியாளர் ஆகியோர் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் கால்நடை மருத்துவமனையை தற்காலிகமாக மாற்று இடத்தில் இயங்கவும், புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.