ரயில் நிலையம் தரம் உயர்த்தும் பணி மந்தம் விரைந்து முடிக்க ரயில் பயணியர் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி, நவ. 13--
மத்திய ரயில்வே துறை சார்பில், ‛அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டி பஜார் மற்றும் பைபாஸ் ஆகிய இரு பகுதிகளில் ரயில் நிலைய பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இரு பிரமாண்ட நுழைவாயில் கட்டடங்கள், லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகளுடன் நடைபாலங்கள், நான்கு பார்க்கிங் வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன.
இது தவிர வணிக வளாகம், நவீன மயமான நடைமேடைகள், எலக்ட்ரானிக் திரைகள், உணவகங்கள், ரயில் பயணியர் ஓய்வு அறை, புதிய முன்பதிவு மையம், ஒப்பனை அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மேற்கண்ட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, கடந்த, 2023ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. அடிக்கல் நாட்டு விழாவின் போது, 2024ம் ஆண்டு துவக்கத்தில் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என மண்டல மேலாளர் கணேஷ் தெரிவித்திருந்தார்.
தற்போது உள்ள சூழலில், 35 சதவீத பணிகள் கூட முடிக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக பைபாஸ் பகுதியில், ஆக்கிரமிப்பில் இருந்த ரயில்வே இடங்களை கையகப்படுத்தி, எட்டு மாதங்களாகியும் அப்பகுதியில் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
ஒப்பந்ததாரருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் கட்டுமான பணிகள் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிதி ஒதுக்கீட்டில் எந்த பிரச்னையும் இல்லை. பைபாஸ் பகுதியில் நிலம் கையகப்படுத்திய போதும், தேசிய நெடுஞ்சாலைக்கும் ரயில்வே துறைக்குமான எல்லை நிர்ணயம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
விரைவில் தீர்வு காணப்பட்டு அப்பகுதியில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். பஜார் பகுதியில், ரயில் நிலைய அணுகு சாலைகள் அனைத்தும் குறுகலாக இருப்பதால், கட்டுமான தளவாடங்கள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும், ஒரு சில முக்கிய பணிகள், உரிய அனுமதி பெற்று, ரயில் சேவையை நிறுத்தி மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பணிகளை துரிதப்படுத்தி, 2025 மார்ச்க்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.