மீண்டும் எகிறியது சில்லரை விலை பணவீக்கம் 13 மாதங்களில் இல்லாத உயர்வு

புதுடில்லி:உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததன் காரணமாக, நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த 13 மாதங்களில் இல்லாத வகையில், அக்டோபரில் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாகவும்; கடந்தாண்டு அக்டோபரில் 4.87 சதவீதமாகவும் இருந்தது.

இதையடுத்து, கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியின் வரம்புக்குள் இருந்த சில்லரை விலை பணவீக்கம், மீண்டும் அந்த வரம்பை மீறியுள்ளது. உணவுப் பொருட்கள் குறிப்பாக, காய்கறிகள் விலை அதிகரித்ததே ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

கடந்த செப்டம்பரில் 35.99 சதவீதமாக இருந்த காய்கறிகள் பிரிவு பணவீக்கம், அக்டோபரில் 42.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் பணவீக்கம் 9.24 சதவீதத்திலிருந்து 10.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்திருப்பதால், டிசம்பரில் ரிசர்வ் வங்கி, கடன் வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு மங்கி விட்டதாக, பணச் சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.





மாதம் பணவீக்கம் (%)

2023அக்டோபர் 4.87நவம்பர் 5.55டிசம்பர் 5.692024ஜனவரி 5.10பிப்ரவரி 5.09மார்ச் 4.85ஏப்ரல் 4.83மே 4.75ஜூன் 5.08ஜூலை 3.54ஆகஸ்ட் 3.65செப்டம்பர் 5.49அக்டோபர் 6.21




மீட்சியில் தொழில்துறை உற்பத்தி



கடந்த செப்டம்பர் மாதத்துக்கான நாட்டின் தொழில்துறை உற்பத்தி 3.10 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக, அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி மைனஸ் 0.10 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் மீண்டுள்ளது.

தயாரிப்பு துறையின் சிறப்பான செயல்பாடுகளே வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் தயாரிப்பு துறை 3.90 சதவீதமும்; மின்சாரத் துறை 0.50 சதவீதமும்; சுரங்கத் துறை 0.20 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் காலத்தில், நாட்டின் தொழில்துறை வளர்ச்சி நான்கு சதவீதமாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 6.20 சதவீதமாக இருந்தது.

Advertisement