டாக்டர்கள் வேலை நிறுத்தம்; அவசர சிகிச்சை பிரிவு செயல்படும்!

18

சென்னை: சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று (நவ.,14) மாநிலம் முழுவதும் டாக்டர்கள் 45 ஆயிரம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சம்பவத்தை கண்டித்து, அரசு டாக்டர்களுக்கான அனைத்து சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தன. மருத்துவமனை வளாகங்களில் டாக்டர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் இந்திய டாக்டர்கள் சங்கத்தினர் இன்று (நவ.,14) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது.



அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது. அவசர சிகிச்சையை தவிர்த்து, மற்ற நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement