இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி இரண்டாவது இடத்தில் தமிழகம்
சென்னை:''நாட்டின் இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதியில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது,'' என, இ.இ.பி.சி., எனப்படும், இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் தலைவர் அருண் குமார் கரோடியா தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளுக்கு, மோட்டார் வாகன பாகங்கள் உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த, 2023 - 24ல் இந்தியாவில் இருந்து, 9.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, இன்ஜினியரிங் பொருட்கள், ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, 2022 - 23ல், 8.98 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்கு வகிப்பதில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகம், அதிக ஏற்றுமதி செய்வதில் மூன்றாவது மாநிலமாகவும், தொழிற்சாலை எண்ணிக்கையில் முதலிடத்திலும் உள்ளது.
நாட்டின் இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதியில் முதல் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலமும், இரண்டாவது இடத்தில் தமிழகமும் உள்ளன.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில், சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நடக்கிறது.
இதில், இந்தியா முழுதும் இருந்து பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், 40 வெளிநாடுகளில் இருந்து, 455 பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுன்சிலின் தென் மண்டல தலைவர் ராமன் ரகு கூறியதாவது:
உக்ரைன் - ரஷ்யா போர், செங்கடல் வழித்தடத்தில் கப்பல்கள் நிறுத்தி வைப்பு, ஜெர்மனி பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால், இந்தியாவில் இருந்து இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்வது சவாலாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, நாட்டின் இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதியில், தமிழகம், 6,008 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 5,320 கோடி ரூபாயாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், தமிழகம் 6,008 கோடி ரூபாய் அளவுக்கு இன்ஜினியரிங் பொருட்களை ஏற்றுமதி செய்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.