ரூபாய் சரிவு தடுப்பாட்டம் ஆடுமா ரிசர்வ் வங்கி?

1

புதுடில்லி:அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டு வரும் நிலையில், ரிசர்வ் வங்கி தலையிட்டு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்குமா என, முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நேற்று 1 பைசா குறைந்து, வரலாற்றில் இல்லாத அளவுக்கு 84.39 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து, டாலரின் மதிப்பு, பிற நாட்டு கரன்சிகளின் மதிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

ரூபாய் மதிப்பின் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவது, முதலீட்டாளர்கள் மத்தியில் மேலும் கவலையை அதிகரித்து உள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், குறுகிய காலத்தில் ரூபாய் மதிப்பு 84.50 - - 84.80 வரை செல்லக்கூடுமென, சந்தை நிபுணர்கள் கணித்து உள்ளனர். தொடர் வீழ்ச்சியைத் தடுக்க, ரிசர்வ் வங்கி தனது அன்னிய செலாவணி கையிருப்பிலிருந்து, டாலரை விற்பது எனும் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டுமென, முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும், வரவிருக்கும் அமெரிக்க பொருளாதார தரவுகள் மற்றும் உலகளாவிய சந்தைகளின் போக்கு ஆகியவை, இந்திய ரூபாயின் பாதையை தீர்மானிக்கும் என்பதால், அதனை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.


10 சதவீதம் சரியும்?



டிரம்பின் வரி விதிப்பு கொள்கை, எச்1பி விசா கட்டுப்பாடு ஆகியவை தொடர்ந்தால், இந்திய ரூபாயின் மதிப்பு, 8 -10 சதவீதம் சரிவை காணும் என்று எஸ்.பி.ஐ., ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement