நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் அகற்றப்படாத பேனரால் ஆபத்து

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், நாராயணபுரம் அருகில் அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் நுழைவாயில் மற்றும் மாணவர்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து, பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படாததால், அது மாணவர்கள் மீது விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

நந்திவரம் - நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் உள்ள அரசு பள்ளியின் முன், பள்ளியின் காம்பவுன்ட் சுவரை ஆக்கிரமித்து, அரசியல் கட்சிகளின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும், வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படவில்லை.

மேலும், இப்பள்ளியின் முன், தொடர்ந்து மாணவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பிரமாண்டமான பேனர்கள் தொடர்ந்து வைக்கும் வழக்கம் உள்ளது.

தற்போது, மழைக்காலம் துவங்கிவிட்டதால், லேசாக காற்று அடித்தாலும், விளம்பர பேனர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இப்பகுதியில் அனுமதி பெறாமல், அத்துமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்றி, தொடர்ந்து அரசுக்கு சொந்தமான பொது இடங்களை ஆக்கிரமித்து பேனர் வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement