புதிதாக ஊராட்சி அலுவலகம் ஈசூரில் கட்டட பணி துவக்கம்
பவுஞ்சூர்:சித்தாமூர் அருகே ஈசூர் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.
நாளடைவில் கட்டடம் பழுதடைந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில ஆண்டுகளுக்கு முன், இ - சேவை மையத்திற்கு மாற்றப்பட்டு, ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கிராம சபை கூட்டம், மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தவும், சேவைக்காக வருவோர் அமரவும் போதிய இடவசதி இல்லாமல், அதிகாரிகள் மற்றும் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மாநில நிதி ஆணையம் மற்றும் மத்திய நிதி ஆணைய நிதியின் கீழ், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், நியாய விலைக்கடை அருகே புதிய ஊராட்சி அலுவலகம் அமைக்கும் பணி, சில நாட்களுக்கு முன் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.