பாடலாத்ரி கோவிலில் 28ல் கும்பாபிஷேகம்
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான குடைவரை கோவில். இந்த வளாகத்தில், ஆண்டாள் சன்னிதியும், கோவிலின் எதிரே பக்த ஆஞ்சநேயர் சன்னிதியும் உள்ளன. கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம், 10 நாட்களும், அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம், மாசி மாதம் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
இக்கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன், உபயதாரர்கள் நிதியில் ராஜகோபுரம், அனைத்து விமானங்கள் மற்றும் சன்னிதிகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது, இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் 28ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கூடி முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.