'அது முடியாத காரியம்': வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு மறுப்பு
புதுடில்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை30 ல் பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கல் மற்றும் சூரல்மலை ஆகிய கிராமங்கள் அழிவைச் சந்தித்தன. 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் ஆக., மாதம் கேரள அரசு மனு அளித்தது.
இதற்கு மத்திய அரசு தற்போது பதில் அளித்துள்ளது. இதற்கான கடிதத்தை கேரள மாநில அரசின் டில்லி பிரதிநிதி கே.வி.தாமசிற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் அனுப்பி வைத்து உள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: முண்டக்கல் மற்றும் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. சூழ்நிலையை சமாளிப்பதற்கு தேவையான நிதி , கேரளா மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் அதிகமாக உள்ளது. பேரிடரை நிர்வகிப்பதற்கான ஆரம்ப பொறுப்பு மாநில அரசிடமே உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே வழங்கிய நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதற்கும், மற்ற செலவுகளை மாநில அரசு செய்ய வேண்டும். ஏற்கனவே பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.388 கோடி இரண்டு தவணைகளாக கேரள அரசுக்குவழங்கி உள்ளோம். இவ்வாறு அந்த கடிதத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
தற்போது மாநில அரசிடம் பேரிடர் மேலாண்மை நிதியில் ரூ.394.99 கோடி உள்ளதாக கேரளா கூறியுள்ளது. இதன் மூலம், சூழ்நிலையை சமாளிப்பதற்கு தேவைப்படும் நிதி அம்மாநில அரசிடம் உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.