அலைபேசி பார்ப்பதை குறைத்தாலே தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் ஓய்வு டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு

விருதுநகர்: அலைபேசி பார்ப்பதை குறைத்தாலே தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் என விருதுநகரில் ஓய்வு டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறினார்.

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரை தவிர் என்ற தலைப்பில் நடந்த பயிலரங்கத்திற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

ஓய்வு டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: அலைபேசியை பயன்படுத்தவேவேண்டாம் எனகூறவில்லை. அதற்கு அடிமையாக வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.

பெற்றோரிடம் மாற்றம் வந்தால் குழந்தைகளிடமும் மாற்றம் வரும். ஒரு நாடு எப்படிப்பட்ட நாடு என்பதும், அந்த மக்கள் எப்படி இருக்கின்றனர் என்பதும் அந்த நாட்டினுடைய மக்களின் பொழுதுபோக்கை பொருத்து இருக்கிறது.

உடல்நலத்தோடு இருக்கிற மக்கள் மனமகிழ்வோடு இருக்கின்றனர்.அந்தவகையில் தற்போது 156 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் நாம் 130வது இடத்தில் உள்ளோம்.

சிறுவர்கள் அலைபேசி திரைகளில் உட்கார்ந்திருந்தால், நிறைய கற்றுக் கொள்ள முடியாமல் போகும்.குறிப்பாக தாய்மொழி தமிழை நன்கு கற்க வேண்டும். அதுதான் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும்.

அலைபேசி பார்ப்பதை குறைத்தாலே தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம். கடந்த செப். வரை சைபர் மோசடியில் ரூ.1500 கோடி வரை மக்கள் பணம் பறி போயுள்ளது, என்றார்.

குழந்தை மன நல மருத்துவர் ப்ரீத்தி குழந்தைகள் வளர்ப்பில் டிஜிட்டல் பயன்பாட்டின் தாக்கம், கிரியாவன் சைபர் நிர்வாக இயக்குனர் அசோக்குமார் மோகன், டிஜிட்டல் பயன்பாட்டில் பெற்றோரின் கண்காணிப்பு ஆகிய தலைப்புகளில் பேசினர்.

Advertisement