பம்பைக்கு சிறப்பு சொகுசு பஸ்: கோவை கோட்டம் புறக்கணிப்பு

திருப்பூர் : 'இன்று முதல் பக்தர்கள் வசதிக்காக, பம்பைக்கு பல்வேறு பகுதியில் இருந்து விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் இயக்கப்படுகிறது. கேரளாவுக்கு மிக அருகில் உள்ள கோட்டமான, கோவையில் இருந்து எஸ்.இ.டி.சி., பஸ்களை இயக்க வேண்டும்,' என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாளை கார்த்திகை மாதம், 1ம் தேதி என்பதால், மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படுகிறது. பக்தர்கள் தமிழகத்தில் இருந்து பயணிக்க ஏதுவாக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சென்னை, திருச்சி, கடலுார், மதுரை மற்றும் புதுச்சேரியில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு, மிதவை பஸ், ஏ.சி., ஏ.சி., இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களை இயக்குகிறது.

இந்த பஸ்களுக்கான முன்பதிவு, www.tnstc.in என்ற இணைய தளம் மற்றும் மொபைல் போன் செயலி வாயிலாக மேற்கொள்ளலாம். அரசு போக்குவரத்து கழகத்தின் குறிப்பிடத்தக்க கோட்டங்களில் ஒன்றாக திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டம் உள்ளது. விரைவு போக்குவரத்து கழக சிறப்பு சொகுசு பஸ் அறிவிப்பில், கோவை கோட்டம் இடம் பெறவில்லை.

ஐயப்ப பக்தர்கள் சிலர் கூறுகையில், 'பம்பைக்கான பஸ்களின் கட்டண விபரம், புறப்படும் சென்று சேரும் நேரம், குறித்த அறிவிப்பை பஸ் ஸ்டாண்ட்டில் அறிவிப்பாக வெளியிட்டால், அதனைப்பார்த்தால், பலருக்கும் பயனளிக்கும். சிறப்பு பஸ் இயக்கம் இருப்பதால், பலருக்கு தெரிவதில்லை,' என்றனர்.

இது தொடர்பாக, எஸ்.இ.டி.சி., அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, 'இரண்டு ஆண்டுக்கு முன் கோவை கோட்டத்தில் இருந்து பம்பைக்கு பஸ் இயக்கிய போது, போதிய வரவேற்பு இல்லை. பக்தர்கள் டிக்கெட் முன் பதிவு அதிகரித்தால், பஸ் இயக்க விரைவு போக்குவரத்து தயாராகத்தான் உள்ளது,' என்றனர்.

Advertisement