கழிவு ஏற்றி வந்த கேரள லாரி: பல்லடம் அருகே சிறைபிடிப்பு

1

பல்லடம் : பல்லடம் அருகே, கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட, 3 டன் கழிவுகளை, பொது இடத்தில் கொட்டிய லாரி பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வடுகபாளையம்புதுார் ஊராட்சி, ஆலுாத்துப்பாளையம் கிராமத்தில், நேற்று அதிகாலை கழிவுகள் ஏற்றியபடி வந்த லாரி ஒன்று, கழிவுகளை கொட்டி விட்டு புறப்பட்டது. தகவல் அறிந்த இப்பகுதி பொதுமக்கள் லாரியை விரட்டிச் சென்று சிறைபிடித்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பால், கழிவுகள் மீண்டும் அதே லாரியில் திருப்பி ஏற்றப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்காமல் லாரியை எடுத்துச் செல்லக்கூடாது என, பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர். சட்ட விரோதமாக, கேரளாவில் இருந்து கழிவுகளை பல்லடத்துக்கு கழிவுகளை அனுப்பியவர், வாங்கியவர், வாகன உரிமையாளர் ஆகிய அனைவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்வதுடன், எந்த வழியாக, இது போன்ற வாகனங்கள் தமிழகத்திற்கு வருகிறது என்பது குறித்தும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், 'பழைய துணி, பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு சாமான்கள், சேர், சோபா உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கேரளாவில் இருந்து எடுத்து வந்து இங்கு கொட்டியுள்ளனர். தமிழகம் என்ன கழிவுகள் கொட்டும் குப்பை தொட்டியா? கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வரை பல சோதனைச்சாவடிகளை கடந்து லாரி எப்படி இங்கு வந்தது? கழிவுகள் எடுத்த வந்த லாரியை சிறை பிடித்து வழக்கு பதிவு செய்வதுடன், லாரி உரிமையாளருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்,' என ஆவேசப்பட்டனர்.

Advertisement