தோண்டாமல் ரோடு போடுவதற்கு எதிர்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி 10வது வார்டு சோமையாபுரம் பகுதியில் பழைய சிமெண்ட் ரோட்டை தோண்டாமல் புதிய ரோடு போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு வாசிகள் பணிகளை நிறுத்தினர்.

ராஜபாளையம் நகராட்சி 10வது வார்டு சோமையாபுரம் பிரண்டை குளம் கண்மாய் அடுத்து 300க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். தாமிரபரணி பாதாள சாக்கடை தோண்டப்பட்டு புதிய ரோடு பணிகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே இங்கு போடப்பட்டுள்ள சிமெண்ட் ரோடு வீடுகளை விட அதிக உயரம் உள்ள நிலையில் தற்போது மீண்டும் அதை அகற்றாமலேயே ஜல்லி கற்கள் போட்டு பேவர் பிளாக் அமைக்கும் பணி நேற்று நடந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்பு வாசிகள் ஏற்கனவே உள்ள சிமெண்ட் ரோட்டினால் வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பள்ளமாக உள்ள வீடுகளுக்குள் மழை நீரோடு கழிவு நீர் உட்புகுந்து குடிநீர் தொட்டிகளில் கலந்து வரும் நிலையில் தற்போது பழைய சிமெண்ட் ரோட்டின் மேல் ஜல்லி கற்கள் போட்டு பேவர் பிளாக் பதிப்பதால் மேலும் குடியிருப்புகள் பள்ளத்திற்குள் சென்று விடும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

அருகில் உள்ள பிரண்டை குளம் கண்மாய் நீர் நிறையும்போது விஷ ஜந்துக்கள் பள்ளமான வீடுகளுக்குள் படையெடுப்பதாகவும் சிமெண்ட் ரோடுகளை அகற்றி விட்டுதான் புதிய ரோடு போட வேண்டும்என தெரிவித்து பணிகளை நிறுத்தியுள்ளனர். நகராட்சி கவுன்சிலர் மாலா குடியிருப்புவாசிகளிடம் பேசியும் சமாதானம் ஆகாததால் ஜல்லிகள் கொட்டியதோடு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement