போலி பாஸ்போர்ட்டில் தங்கியிருந்த நபர்; வழக்குக்கு பயந்து பெயரை மாற்றியது அம்பலம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, போலி பாஸ்போர்ட்டில் தங்கி பணியாற்றி வந்த நபர், வழக்குக்கு பயந்து பெயரை மாற்றி கூறி தங்கியது விசாரணையில் தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே குருசாமிபாளைத்தில், நேற்று முன்தினம் போலி பாஸ்போர்ட் வைத்து, வேலை செய்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த இஸ்ரோபில் முல்லா, 30, மற்றும் சுமன் (எ) மசூல் மிலான், 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இஸ்ரோபில் முல்லா மீது வங்கதேச போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததால், அவரை போலீசார் வங்கதேசம் அழைத்து சென்றனர்.
ஆனால், சுமன் என்ற பெயரில் இருந்த நபரை புதுச்சத்திரம் போலீசார், அவர் மீது போலி பாஸ்போர்ட்டில் தங்குதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்த ஆவணங்களை கேட்டுள்ளனர். அதில் அவர் தன் பெயர் சுமன் என்று தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார், அவரின் உண்மையான பெயரை தெரிந்து கொள்வதற்காக, வங்கதேசத்தில் உள்ள அவரது தம்பியிடம், சுமன் குறித்த ஆதார் உள்ளிட்ட தகவல்களை கேட்டுள்ளனர். அப்போது, அவர் பெயர் சுமன் (எ) மசூல் மிலான் என தெரியவந்தது.
இது குறித்து, சுமனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உண்மை பெயரை கூறினால், மீண்டும் இங்கே தங்க முடியாது என்பதால், பெயரை மறைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சுமன் (எ) மசூல்மிலான், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.