புதிய சந்தை வளாகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

ப.வேலுார்: சுல்தான்பேட்டை, சந்தை வளாகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ப.வேலுார், சுல்தான்பேட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், 1 கோடியை, 47 லட்சம் மதிப்பில், 60 கடைகள் கட்டப்பட்டது. வரும், 17ம் தேதி சந்தை வளாகம் செயல்பட உள்ளது. கபிலர்மலை, ஜேடர்பாளையம், பொத்தனுார், பாண்டமங்கலம், பரமத்தி, நன்செயஇடையார், பாலப்பட்டி பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் இப்பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அமைத்து விற்பனை செய்தனர்.
இந்நிலையில் வரும், 17 முதல் வாரச்சந்தை தொடங்கும் நிலையில், பழைய விவசாயிகளுக்கு கடை ஒதுக்கப்படாமல், புதிதாக வந்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்ததாக கூறி, வாரச்சந்தை வளாகத்தில் நுழைந்து இடத்தை பிடிக்க ஆரம்பித்தனர். அதிர்ச்சிடைந்த ப.வேலுார் டவுன் பஞ்., சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேஷ், துாய்மை பணியாளர்கள் மூலம் அங்கிருந்து விவசாயிகள், வியாபாரிகளை வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,' ப.வேலுார் வாரச்சந்தை, 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் உள்ளபோது, 60 கடைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மேலும் ஏலம் ஒப்பந்ததாரர் வணிக வளாக கடைகள் மற்றும் வெளியே திறந்த நிலையில் போடும் கடைகளுக்கு, உரிய கட்டண விபரம் இதுவரை அறிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முற்றுகை போராட்டம் செய்தோம். வரும் நாட்களில், குலுக்கல் மூலம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என, டவுன் பஞ்., நிர்வாகத்தினர் அறிவித்துள்ளதால், முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்கிறோம்,'' என்றனர்.

Advertisement