புதைவட மின்கம்பி பாதை துவக்கம்
திருச்செங்கோடு : திருச்செங்கோட்டில் நான்கு ரத வீதிகளில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், புதைவட மின்கம்பி பாதையை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
திருச்செங்கோட்டில் தைப்பூச தேர்த்திருவிழா, வைகாசி விசாக தேர்த்திருவிழா, மாரியம்மன் பண்டிகை, சூரசம்ஹாரம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நான்கு ரத வீதிகளில் நடைபெறுவது வழக்கம். அப்போது, சாலையின் குறுக்கே மின்கம்பிகள் வருவதால் மின்சாரத்தை தடைசெய்து நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால் வியாபாரிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் நான்கு ரத வீதிகளில், சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பிகளை அகற்றிவிட்டு புதைவட மின்கம்பிகளாக மாற்றி அமைக்கப்பட்டது. இப்பணியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மதுராசெந்தில், திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.