நுாலகத்தில் கழிப்பிட வசதி; மகிழ்ச்சியில் வாசகர்கள்

ப.வேலுார்: நுாலகத்துக்கு கழிப்பிட வசதி கிடைத்ததால், கலெக்டருக்கு வாசகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ப.வேலுாரில், 60 ஆண்டுகளாக பழமையான நுாலகம் உள்ளது. 11 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ளது. தினமும், 200 பேர் வருகின்றனர். காலை 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் டி.என்.பி.சி., குரூப் தேர்வுக்கு படிக்கும் தேர்வாளர்கள் தினமும் நுாலகம் வந்து படிக்கின்றனர். ஆனால், இங்கு கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. குறிப்பாக பெண்கள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த செப்., 13ம் தேதி ப.வேலுார் வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம், கழிப்பிட வசதி வேண்டி வாசகர்கள் மனு அளித்தனர். இதையடுத்து, நாமக்கல் கலெக்டர் உமாவிடம் இது குறித்து விசாரிக்க அமைச்சர் உத்தரவிட்டார். பின், விசாரணை நடத்திய கலெக்டர் உமா, நாமக்கல் டவுன் பஞ்., உதவி இயக்குனர் குருராஜாவை தொடர்பு கொண்டு, 60 நாட்களில் கழிப்பிட வசதி செய்த தர வேண்டும் என, உத்தரவிட்டார். இதையடுத்து, கழிப்பிடம் கட்டுமான பணி நுாலக வளாகத்தில் துவங்கியது. நேற்று முன்தினம் பணி நிறைவு பெற்று, வாசகர்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
கழிப்பிட வசதி செய்து கொடுத்த கலெக்டரை, வாசகர்கள் பாராட்டினர்.

Advertisement