மருத்துவர் மீது தாக்குதலை கண்டித்து சேலம், ஆத்துாரில் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம்: அரசு மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து சேலம், ஆத்துாரில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில், நேற்று முன்தினம் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2ம் நாளாக நேற்றும், அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து, மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இதில் திரளானோர், அரசு மருத்துவர் மீது நிகழ்ந்த தாக்குதலை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மேலும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் தண்டனைகள் கிடைக்கும்படி சட்டங்கள் இயற்றல், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகினர். அதேபோல் ஆத்துார் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் மருத்துவர்கள், பணிக்கு சென்றனர்.

Advertisement