என்னா அடி... சாம்சன், திலக் 'சரவெடி' * இருவரும் சதம் விளாசல் * கோப்பை வென்றது இந்தியா
ஜோகனஸ்பர்க்: நான்காவது 'டி-20'ல் சஞ்சு சாம்சன், திலக் வர்மா இணைந்து 'சரவெடி' சதம் விளாசினர். இவர்களது ரன் குவிப்பு கைகொடுக்க, இந்திய அணி 135 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடரை 3-1 என கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி நான்கு போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. நேற்று நான்காவது, கடைசி போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. இத்தொடரில் முதன் முறையாக 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பேட்டிங் தேர்வு செய்தார்.
சாம்சன் அபாரம்
இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. யான்சென் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் அடித்த பந்தில் கிடைத்த 'கேட்ச்' வாய்ப்பை, ஹென்ரிக்ஸ் நழுவவிட்டார். கோயட்சீ வீசிய 2வது ஓவரில் சாம்சன், தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து சிபம்லா ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் அடித்தார்.
போட்டியின் 5வது ஓவரை வீசினார் சிம்லேன். இதன் முதல் 3 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த அபிஷேக், கடைசி பந்தையும் சிக்சருக்கு விரட்ட, 24 ரன் எடுக்கப்பட்டன. மீண்டும் வந்த சிபம்லா பந்தில், அபிஷேக் (36 ரன், 18 பந்து) அவுட்டானார்.
இந்திய அணி 'பவர்பிளே' ஓவர் (6) முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 73 ரன் எடுத்தது. சாம்சனுடன் இணைந்தார் திலக் வர்மா. மஹாராஜ் வீசிய 9 வது ஓவரில், திலக் வர்மா அடுத்தடுத்து சிக்சர் அடித்து மிரட்டினார். இந்திய அணி 8.3 ஓவரில் 100/1 ரன்களை எட்டியது. ஸ்டப்ஸ் வீசிய 10 வது ஓவரின் முதல் இரு பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார் சாம்சன். இதே ஓவரில் திலக் வர்மா, இரண்டு பவுண்டரி அடிக்க, 21 ரன் எடுக்கப்பட்டன.
திலக் கலக்கல்
அடுத்து வந்த சிபம்லா ஓவரில் (12வது) சாம்சன் 1, திலக் வர்மா 2 சிக்சர் அடித்தனர். மீண்டும் மிரட்டிய திலக் வர்மா, மார்க்ரம் வீசிய
14வது ஓவரின் கடைசி 4 பந்தில், 4, 6, 6, 4 என ரன் மழை பொழிந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 14.1 வது ஓவரில் 200/1 ரன்களை எட்டியது. சாம்சன், 3வது சதம் எட்டினார். திலக் வர்மா 41வது பந்தில் சதம் கடந்தார். இந்திய அணி 20 ஓவரில் 283/1 ரன் குவித்தது. திலக் வர்மா (120), சாம்சன் (109) அவுட்டாகாமல் இருந்தனர்.
அர்ஷ்தீப் 'வேகம்'
கடின இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணி, அர்ஷ்தீப் சிங் 'வேகத்தில்' அதிர்ந்தது. ஹென்ரிக்ஸ், கிளாசன் 'டக்' அவுட்டாக, மார்க்ரம் 8 ரன்னில் திரும்பினார். பாண்ட்யா பந்தில் ரிக்கிள்டன் (1) சிக்கினார். தென் ஆப்ரிக்க அணி 10 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த மில்லர், ஸ்டப்ஸ் போராடினர்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது, வருண் சக்ரவர்த்தி சுழலில் மில்லர் (36) வெளியேறினார். மறுபக்கம் ஸ்டப்ஸ் (43), பிஷ்னோய் பந்தில் வீழ்ந்தார். சிம்லேன் (2), கோயட்சீ (12) நிலைக்கவில்லை. கடைசியில் சிபம்லா (3) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 18.2 ஓவரில் 148 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 135 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய சார்பில் அர்ஷ்தீப் 3, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
முதல் வீரர்
சர்வதேச 'டி-20'ல் ஒரே ஆண்டில் 3 சதம் அடித்த முதல் வீரர் ஆனார் இந்தியாவின் சாம்சன்.
அடுத்தடுத்து...
சர்வதேச 'டி-20'ல் அடுத்தடுத்த போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் ஆனார் இந்தியாவின் திலக் வர்மா. முன்னதாக கஸ்தவ் (பிரான்ஸ்), ரூசோவ் (தெ.ஆப்.,), பில் சால்ட் (இங்கிலாந்து), சாம்சன் (இந்தியா) இதுபோல சதம் அடித்துள்ளனர்.
மூன்றாவது முறை
'டி-20' வரலாற்றில் (சர்வதேசம்) ஒரே இன்னிங்சில் இரு பேட்டர்கள் சதம் அடித்த நிகழ்வு நேற்று மூன்றாவது முறையாக நடந்தது. இந்தியாவின் சாம்சன், திலக் வர்மா சதம் அடித்தனர். இதற்கு முன் செக் குடியரசு, ஜப்பான் அணி பேட்டர்கள் இதுபோல விளாசினர்.
129
நேற்று முதல் 10 ஓவரில் இந்திய அணி 129/1 ரன் குவித்தது. 'டி-20' அரங்கில் முதல் 10 ஓவரில் இந்திய அணி எடுத்த, இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது. சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிராக 152/1 ரன் எடுத்தது, முதலிடத்தில் உள்ளது.
13.6 ஓவர்
சர்வதேச 'டி-20'ல் குறைந்த ஓவரில் 200 ரன் எடுத்த அணி வரிசையில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்தது. நேற்று 14.1 ஓவரில் 200/1 ரன் எடுத்தது. இதில் தென் ஆப்ரிக்கா (13.5 ஓவர், எதிர்-வெ.இண்டீஸ், 2023) முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே இந்திய அணி 13.6 ஓவரில் 200 ரன் (எதிர்-வங்கதேசம், 2024) எடுத்தது இரண்டாவதாக உள்ளது.
283
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டி-20' போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா. நேற்று 20 ஓவரில் 283 ரன் குவித்தது. முன்னதாக 2022ல் கவுகாத்தி போட்டியில் 237/3 ரன் எடுத்ததே அதிகம்.
* சர்வதேச 'டி-20' அரங்கில் இந்திய அணி, தனது 2வது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிராக 297/6 ரன் (2024, ஐதராபாத்) குவித்திருந்தது.
23 சிக்சர்
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு இடையிலான 'டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த அணி வரிசையில் இந்தியா (23) முதலிடத்தில் தொடர்கிறது. முன்னதாக வங்கதேசத்திற்கு எதிராக, இந்தியா 22 சிக்சர் (2024) அடித்து இருந்தது. தவிர, வெஸ்ட் இண்டீஸ் (2023, எதிர்-தெ.ஆப்.,), ஆப்கானிஸ்தான் (எதிர்-அயர்லாந்து, 2019) அணிகள் தலா 22 சிக்சர் அடித்து இருந்தன.
12 விக்கெட்
தென் ஆப்ரிக்க 'டி-20' தொடரில் 12 விக்கெட் சாய்த்தார் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி. இதையடுத்து இரு அணிகள் இடையிலான 'டி-20' தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர் ஆனார்.
* தவிர, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 'டி-20' தொடரில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர் ஆனார் வருண் சக்ரவர்த்தி. முன்னதாக வெஸ்ட் இண்டீசின் பிராவோ, 10 விக்கெட் (5 'டி-20', 2021) வீழ்த்தி இருந்தார்.