இரு இடங்களில் லாரி கவிழ்ந்த விபத்தால் பரபரப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே கொள்ளானுார் கிராமத்தில் உள்ள தனியார் காகித ஆலையில் இருந்து பேப்பர் ரோல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கவரைப்பேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.
கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், கெட்ணமல்லி கிராமத்தில், கட்டுப்பாடு இழந்து சாலையோர மண்ணில் சரிந்து மின் கம்பம் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அருகில் இருந்த மின்மாற்றில் பலத்த சத்தத்துடன் தீப்பொறி தெறித்தால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுனர் ராஜேந்திரன், 55, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதேபோல் மாதர்பாக்கம் பகுதியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி, நேற்று காலை எம்.சாண்ட் ஏற்றிய டாரஸ் டிப்பர் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. மாதர்பாக்கம் - கும்மிடிப்பூண்டி சாலையில், மாநெல்லுார் பகுதியில், முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, சாலையோர பள்ளத்தில் சரிந்து, மின் பாதையில் கவிழ்ந்து சாய்ந்தது.
இந்த விபத்தால், மாநெல்லுார் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. லாரியில் இருந்த எம்.சாண்ட் முழுதும் சாலையோர பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்திலும் ஓட்டுனர் உயிர் தப்பினார்.
இரு விபத்துகள் குறித்து, கவரைப்பேட்டை மற்றும் பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இரு இடங்களில், மின் வாரிய ஊழியர்கள் மீட்பு பணிகள் மேற்கொண்டனர். இரு வேறு இடங்களில் மின் பாதையில் கவிழ்ந்த லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.