பஸ்சிலிருந்து வாலிபரை இறக்கி கொடூரமாக வெட்டி கொன்ற கும்பல்
திருச்சி:திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் மதி விஷ்ணு, 20.
இவர் நேற்று காலை 8:00 மணிக்கு, தன் ஊரில் இருந்து திருச்சி செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.
அந்த பஸ் திண்டுக்கரை என்ற இடத்தில் வந்தபோது, மூன்று பைக்கில் வந்த ஐந்து இளைஞர்கள், பஸ்சை வழிமறித்து, பஸ்சில் இருந்த மதி விஷ்ணுவை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.
அவர்கள் பிடியிலிருந்து தப்பி ஓட முயற்சித்த அவரை, சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு, தப்பியோடினர்.
கடந்த ஆண்டு செப்., மாதம், கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஐ.டி.ஐ., மாணவர் கோகுல், 18, என்பவரின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக தெரிகிறது.
கோகுல் கொலை வழக்கில் குற்றவாளியாக உள்ள மதி விஷ்ணு, சிறையில் இருந்து, 10 நாட்களுக்கு முன் தான் ஜாமினில் வந்தார். மதி விஷ்ணு கொலை குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மறியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலை பார்க்க வந்த உறவினர்கள், நேற்று மாலை 3.30 மணிக்கு, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, திருச்சி அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிட வைத்தனர். இந்த மறியலால், அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.