மின் வாரியத்துக்கு எதிராக ஓய்வூதியதாரர்கள் தர்ணா
சென்னை: புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலக பின்புறத்தில், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, நல அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது:
மின் வாரியத்தின் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களால், தற்போது பணிபுரியும் பணியாளர்கள் ஓய்வுபெற்ற பின், ஓய்வூதியம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அந்த ஒப்பந்தம் தொடர்பாக எங்களுடன் நிர்வாகம் பேச்சு நடத்தி, நாங்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை ஒப்பந்தத்தில் இடம்பெற செய்ய வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ஒருவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு, 4 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், காப்பீட்டு நிறுவனம் அதை ஏற்பதில்லை. எனவே, காப்பீட்டு தொகையை, மின் வாரிய நிர்வாகமே வழங்க வேண்டும்.
கணவனை இழந்த பெண்கள், விவாகரத்தான பெண்கள், மாற்றுத்திறனாளிக்கு குடும்ப ஓய்வூதியமாக, 7,750 ரூபாய் வழங்கப்பட்டது. இது, தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வழங்க வேண்டும்.
மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.