10 ஆண்டுளாக நடைபெறும் போராட்டத்திற்கு தீர்வு... எப்போது? சாலை வசதி கேட்டு நாற்று நட்டு கிராம மக்கள் எதிர்ப்பு
செஞ்சி: செஞ்சி அருகே சாலை வசதி கேட்டு 10 ஆண்டுகளாக போராடி வரும் வடகால் கிராம மக்கள் நேற்று நாற்று நட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
செஞ்சி அடுத்த கோணை ஊராட்சிக்குட்பட்ட துணை கிராமம் வடகால். செஞ்சி கோட்டைக்கு பின்புறம் காடுகளை அடுத்துள்ள பழமையான கிராமம். இங்கு 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். செஞ்சியில் இருந்து 10 கி.மீ, தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்குச் ஒதியத்துார் வழி மற்றும் சோமசமுத்திரம் வழி என 2 வழிகள் உள்ளது.
சோமசமுத்திரம் வழியாகச் செல்லும் சாலையின் குறுக்கே வனத்துறை ஏரி உள்ளது. இந்த ஏரி சாலை வழியாக வந்தால் 7 கி.மீ., துாரத்தில் செஞ்சிக்கு வந்து விடலாம். ஆனால் வனத்துறை சாலை போட அனுமதிக்காததால் ஏரிக்கரை சாலை குறுகலாகவும், கரணம் தப்பினால் மரணம் என்கிற வகையிலும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக கார், வேன், ஆட்டோ சென்று வர முடியாது.
ஒதியத்துார் வழியாக வரும் மற்றொரு சாலை 20 ஆண்டுகளுக்கு முன் வெறும் ஜல்லிகள் பரப்பி சாலை போடப்பட்டது. இதன் பிறகு எந்த அரசும் இந்த கிராமத்தைக் கண்டுகொள்ளவில்லை. இந்த வழியாக பள்ளி வேன்களும், இருசக்கர வாகனங்கள் மட்டும் வந்து செல்கின்றன.
சாலை மோசமாக இருப்பதால் வாடகை கார், ஆட்டோக்கள் கூட இந்த கிராமத்திற்கு வருவதில்லை. பள்ளி வேன்னும் பலமுறை விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த கிராமத்தில் இருந்து செஞ்சியில் உள்ள அரசு பள்ளிக்கும், கல்லுாரிக்கும் சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகள் ஏரிக்கரை சாலையில் தினமும் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். மழைக் காலங்களில் சாலை சேறும் சகதியுமாக நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
கடந்த 13ம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பணியை பைக்கில் அழைத்துச் சென்றபோது சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக கர்ப்பிணி காயமின்றி தப்பினார்.
கடந்த ஒராண்டுக்கு முன் கிராம மக்கள் திரண்டு சாலை வசதி கேட்டு அப்பம்பட்டில் சாலை மறியல் செய்தனர். அப்போது செஞ்சி - விழுப்புரம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
அங்கு வந்த செஞ்சி பி.டி.ஓ., ஒரு மாதத்தில் சாலை போடப்படும் என உறுதியளித்தார். ஆனால் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அவதிப்படும் மக்கள் அமைச்சர், கலெக்டர் என பலரிடம் மனு கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
கடும் விரக்தியில் உள்ள இந்த கிராம மக்கள், அடுத்து வரும் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கிராம பெண்கள் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த பிரச்னைக்க தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.