புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு; கவலையை துாக்கி எறிந்து சிகிச்சைக்கு வாங்க
பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழிப்புணர்வு, தொடர் சிகிச்சையால் 40 பேர் குணமடைந்துள்ளனர்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் 2022 டிச., மாதம் புற்றுநோய் சிகிச்சை பிரிவு துவங்கியது. இந்நோய் குறித்த அறியாமையினால் மாவட்டத்தில் ஆண்டுக்கு 500 க்கும் மேற்பட்டோர் புற்றுநோய் என தெரியாமல் முறையான சிகிச்சை பெறாமல் ஏதாவது காரணங்கள் கூறி மரணம் அடைகின்றனர்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள். இந்நோய் பாதிப்புக்குள்ளனவர்கள் பலர் மன வேதனையில் இருந்து விடுபட்டு விழிப்புணர்வினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வர துவங்கியுள்ளனர்.
மாவட்ட அரசு மருத்துவமனையில் இதுவரை மார்பக புற்றுநோய்- 23, கர்ப்பவாய் புற்று -6, சினைப்பை புற்று -4, வாய் புற்றுநோய் -13, வயிற்று குடல் புற்று- 9, நுரையீரல் புற்று -4, பித்தப்பை புற்று -5 உட்பட 101 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18 பேர் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளனர்.
பாதிப்புக்கு காரணம் என்ன
தவறான பழக்கத்தை தொடரும் போது மரபணு தனது இயல்பு நிலையில் மாறுபட்டு புற்றுநோய் உருவாகிறது. சிலருக்கு மரபு ரீதியாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. புகையிலை, சிகரெட் புகைப்பது, அளவில்லாமல் மது குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் தாக்கம் ஏற்படும்.
இது குறித்து புறறுநோய் சிகிச்சை சிறப்பு டாக்டர் பாரதி கூறுகையில்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஓர் ஆண்டில் 10 பேருக்கு மார்ப்பக புற்றுநோய் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவ. 16ல் 44 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று 100யை தாண்டி 101 வது நபர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 40 பேர் குணமடைந்துள்ளனர்.
புற்றுநோய் பாதித்தவர்கள் மனக்கவலையை தூக்கி எறியுங்கள். இதுவும் சாதாரண நோய் என கருத வேண்டும்.
மருத்துவ குழுவினரான நாங்கள் உங்களை காப்பாற்றுவோம். மன தைரியத்துடன் சிகிச்சை மேற்கொண்டால்புற்றுநோயை குணப்படுத்தலாம். உடலில் எந்த பாகத்தில் கட்டிகள் தென்பட்டாலும் தாமதமின்றி மருத்துவமனைக்கு வாருங்கள். நவீன சிகிச்சை மூலம் துவக்கத்தில் சரி செய்யலாம். ரகசியம் காக்கப்படும் என்றார்.