புதிய தொழில் முனைவோருக்கு 36 தொழில்நுட்பங்கள் தயார்!

திருப்பூர்; புதிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், 36 வகையான தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கும், சி.எஸ்.ஐ.ஆர்., ஆராய்ச்சியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையில், 22ம் தேதி நடக்கிறது.

புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய, சி.எஸ்.ஐ.ஆர்., என்ற ஆராய்ச்சி அமைப்பு (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்) துவங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இயங்கும் இக்குழுவில், ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 'லகு உத்யோக் பாரதி' அமைப்பு, சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்புடன் இணைந்து, புதிய தொழில்நுட்ப பகிர்வுகளை, குறு, சிறு தொழில்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்ப பகிர்வுக்காக, சி.எஸ்.ஐ.ஆர்., மற்றும் 'லகு உத்யோக் பாரதி' சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவில், வரும், 22ம் தேதி நடக்கிறது. சி.எஸ்.ஐ.ஆர்., ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தும் போது, புதிய தொழில்நுட்பம் ரீதியான விவாதமும் இடம்பெறுகிறது.

இதுகுறித்து 'லகு உத்யோக் பாரதி' தேசிய இணை செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:

கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை, தொழிலில் பயன்படுத்தி, உயர்தர உற்பத்தியாளராக மாற வேண்டும். கண்டறியப்பட்ட தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும். கடந்த ஓராண்டில் மட்டும், 55 வகையான தொழில்நுட்பங்கள், வணிக பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றைக் கொண்டு, 18க்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ., தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

தனி நிறுவனமாகவும், குழுவாக இணைந்தும், தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தலாம். தண்ணீர் சுத்திகரிப்பு, தோல் பொருள் பதப்படுத்துதல், கட்டுமானம், பிளாஸ்டிக் பேக்கேஜ் உட்பட, 36 வகையான தொழில்நுட்பம் தயாராக இருக்கிறது. புதிதாக தொழில் துவங்கும் திட்டம் வைத்துள்ள தொழில்முனைவோர் பங்கேற்று, முழு விவரங்களை கேட்டு, அவற்றை தொழில் ரீதியாக பயன்படுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement