கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1,164 கோடி கடனுதவி; தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தகவல்
கூடலுார்; ''நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம், 1.55 லட்சம் பயனாளிகளுக்கு 1,164 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் நந்தட்டி அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்ட துவக்க விழா, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நேற்று நடந்தது. மாநில தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கூடலுார் ஜானகி அம்மாள் மண்டபத்தில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழா நடந்தது.
விழாவில், அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''கூட்டுறவு சங்கங்கள் மக்களுக்கு கடனுதவி வழங்கி அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவி வருகின்றன. அதில், நீலகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 1.55 லட்சம் பயனாளிகளுக்கு, 1,164 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில் விவசாயம் சார்ந்த கடன் உதவிகள் வழங்கப்படும்,'' என்றார். தொடர்ந்து, அரசு நல உதவிகளை வழங்கினர்.
விழாவில், அரசு கொறடா ராமச்சந்திரன், கூடுதல் கலெக்டர் கவுசிக், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.