'சில்லாங்கில்' இருந்து கஞ்சா சப்ளை; ஐ.டி., ஊழியர் கைது

கோவை; மேகாலயா மாநிலம் சில்லாங்கில் இருந்து கோவை மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்தனர்.

பீளமேடு பகுதியில் மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சிட்ரா அருகில் இருந்த ஒரு அபார்ட்மென்டில் மாணவர்கள் தங்கியிருந்த அறை ஒன்றில் சோதனை செய்த போது, ஒரு காருக்கு இரண்டு நம்பர் பிளேட்கள் இருந்துள்ளது.

சந்தேகம் அடைந்த போலீசார் அறையில் இருந்த தனியார் கல்லுாரி மாணவர்கள், பிரனேஷ், 19, சபரிஷ், 20 மற்றும் கவின் குமார், 22 ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து முதல்தர கஞ்சா வாங்கி இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

மேலும் விசாரிக்கையில், உடுமலை, வெங்கடேஸ்வரா லே அவுட் பகுதியை சேர்ந்த பி.இ., பட்டதாரி அம்ருதீன், 24 ஐ.டி., நிறுவன ஊழியர். 'வர்க் பிரம் ஹோம்' முறையில் பணியாற்றி வருகிறார்.

இவர், சில்லாங் பகுதியில் இருந்து வேலை செய்த படியே அங்கு கிடைக்கும் ஒரிஜினல் கஞ்சாவை வாங்கி, கூரியர் வாயிலாக மாணவர்களுக்கு சப்ளை செய்து வருவது தெரியவந்தது.

மேலும், அவர் கஞ்சா விற்ற பணத்தை வைத்து சில்லாங்கில் தங்கும் விடுதிகள் கட்டி, நடத்தி வருகிறார். இவரை பிடிக்க கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் தனிப்படை அமைத்தார்.

தனிப்படையினர் சில்லாங் பகுதிக்கு சென்று அம்ருதீனை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிகாட்டிய தந்தை

கஞ்சா வழக்கில் போலீசார் தேடி வருவதை அறிந்த அம்ருதீனின் தந்தை, அம்ருதீன் மொபைலில் இருந்த தொடர்பு எண்கள், யாரிடம் பேசினார் என்ற விவரங்கள் அனைத்தையும் அழிக்கும் படி தெரிவித்துள்ளார். அதன் படி, மொபைலில் இருந்து படங்கள், மொபைல் எண்கள், போட்டோ உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் அம்ருதீன் அழித்து விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். பின்னர், சாதாரண பட்டன் போன் வாங்கி பயன்படுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement