குத்துச்சண்டையில் மைக் டைசன் தோல்வி; ஜேக்பால் வெற்றி
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், நடைபெற்ற போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனை,58, ஜேக் பால்,27, வீழ்த்தினார்.
முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் 58, இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார்.
சுமார் 20 ஆண்டுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார். முன்னதாக எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கி தன் புகழை இழந்துவிட்டார். இதனால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஜேக்பால் ,31 என்ற பிரபல யூடியூபர் கடந்த 2013ம் ஆண்டு முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார். இந்நிலையில் இன்று (நவ.,16) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், குத்துச்சண்டை போட்டி நடந்தது.
இதில், 58 வயதான மைக் டைசன், 31 வயதான யூடியூபர் ஜேக்பால் மோதினர். 8 சுற்றுகளாக நடந்த போட்டியில் மைக் டைசனை ஜேக் பால் வீழ்த்தினார். போட்டியின் அறிமுக விழாவில், ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்த காட்சிகள் வைரலாகி, உலக அளவில் போட்டிக்கு எதிர்பார்ப்பு கிளம்பியது. 20 ஆண்டுகளுக்கு பின் மைக் டைசனின் திறமையை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற ஜேக்பாலுக்கு இந்திய மதிப்பில் 338 கோடி ரூபாய் பரிசுப்பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.