மழை வந்தால் படகை தேடும் நிலை; இது தான் வளர்ச்சியா? திராவிட மாடலா? அன்புமணி தாக்கு

சென்னை: 'மழை வந்தால், படகு எங்கு இருக்கிறது என்று தேடும் நிலையில் இருக்கிறோம். இது தான் வளர்ச்சியா? திராவிட மாடலா?' என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: சட்டங்கள் இருக்கிறது. ஆனால் டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனை நான் பல நாட்களாக கூறி வருகிறேன். டாக்டர்களுக்கு வேலை பளு அதிகம். போதுமான டாக்டர்கள் இல்லை. நர்ஸ்கள் இல்லை. புதிய டாக்டர்களை நியமனம் செய்ய அரசு தயங்கி கொண்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கான தகுதியான டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசு தற்காலிக முறையில் பணி அமர்த்துவேன் என கூறுகிறது. இது அரசு அறிவிக்காத கொள்கை.

வாக்குறுதிகள்



தேர்தலுக்கு முன்பு பெரிய வாக்குறுதிகள் கொடுப்பார்கள். ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் கையெழுத்து போடுவேன் என கூறினார்கள். ஆனால் தி.மு.க., ஆட்சி வந்த பின் எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மாறி, மாறி குற்றச்சாட்டு சொல்வதை தவிர, மக்கள் மீது அக்கறை இல்லை. நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமும் இல்லை என, தி.மு.க., அ.திமு.க., மீது சென்னை உயர் நீதிமன்றம் எங்களது கருத்தை கூறி இருக்கிறார்கள். 57 ஆண்டுகளாக இரு கட்சிகள் ஆட்சி செய்து வருகிறார்கள்.

திராவிட மாடல்



இந்த 57 ஆண்டு காலத்திற்கு பிறகும், சென்னையின் நிலைமையை பாருங்கள். மழை என்று ஒரு வார்த்தை வந்த உடன், அடுத்ததாக அரசு ஊழியர்கள் படகுகள் எங்கு இருக்கிறது என தேடி கொண்டு போகிறார்கள். 57 ஆண்டு காலம் ஆட்சி செய்தும் சரியான வடிகால், கட்டுமான பணிகள் செய்யவில்லை. மழை வந்தால், படகு எங்கு இருக்கிறது என்று தேடும் நிலையில் இருக்கிறோம். இது தான் வளர்ச்சியா? திராவிட மாடலா? வட கிழக்கு மழை தீவிரமாக வர போகிறது. அரசு என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. 2026ல் கூட்டணி ஆட்சி தான். அந்த கூட்டணியில் பா.ம.க., இருக்கும். இவ்வாறு அன்புமணி கூறினார்.

Advertisement