1,315 பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முகாம்
திருவள்ளூர்,
திருவள்ளுர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நேற்று துவங்கியது. திருநின்றவூர் ஜெயா மேல்நிலைப் பள்ளி, திருவள்ளுர் லட்சுமி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான முகாம் நடைபெற்று வருகிறது. கோட்டாட்சியர், தாசில்தார், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகம் 3,699 ஓட்டுச் சாவடி அமைந்துள்ள 1,315 பள்ளிகளில் முகாம் நடக்கிறது.
முகாமில், 18 வயது பூர்த்தி அடைந்தோர் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம், இடமாற்றம் செய்யவும், ஆதார் இணைக்கவும் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். நேற்று துவங்கிய சிறப்பு முகாம் இன்றும், வரும் 23, 24 ஆகிய நாட்களிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர்கூறினார்.
திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.