கிளாக்காடு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம்
கள்ளக்குறிச்சி: கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பால நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம் நடந்தது.
கூட்டுறவு வார விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சரக துணைப் பதிவாளர் சுகந்தலதா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர்வதன் மூலம் அரசு சார்ந்த திட்டங்களை பெற்று பயனடையலாம். மகளிர் குழு கடன், கல்வி மற்றும் சேமிப்பு கடன் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, மலைவாழ் மக்கள் சுய தொழில் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் தணிக்கை முடிந்த பிறகு கூட்டுறவு சங்கத்தின் லாப தொகையை பிரிவினை செய்து உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ள நபர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேரலாம் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுரேஷ், வெள்ளிமலை கள அலுவலர் வேல்முருகன், வெள்ளிமலை கூட்டுறவு சார்பதிவாளர் சக்திவேல், அலுவலக கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் நிர்மல், லேம்ப் சங்க செயலாளர்கள் ராமர், குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மரக்கன்று நடப்பட்டது.