அதிகாலையில் ஒலித்த சுவாமியே சரணம் ஐயப்பா! -கார்த்திகை மாதம் மாலை அணிந்து... நேர்த்தியாகவே விரதம் துவங்கிய பக்தர்கள்
திருப்பூர்: கார்த்திகை மாதப்பிறப்பான நேற்று, 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள், திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவில், மாலை அணிந்து, விரதம் துவக்கினர்.
கார்த்திகை மாதம் என்றாலே, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், ஐயப்ப பக்தர்களின் விரதம் துவங்கிவிடுகிறது. அதிகாலை எழுந்து, குளிர்ந்த நீரில் குளித்து, கறுப்புவேட்டி, துண்டு அணிந்து, பக்தர்கள் விரதத்தை துவக்குகின்றனர்.
சபரிமலைக்கு செல்லும் மண்டல விரதத்தை துவக்கி விடுகின்றனர். தொழில் நிலை, விடுமுறையை பொறுத்து, ஒரு வாரம் முதல் மாலை அணிந்து, கோவிலுக்கு இருமுடி கட்டி செல்ல துவங்குகின்றனர். கல்லுாரி மாணவர், பள்ளி மாணவர்களும் மாலை அணிவது அதிகரித்துள்ளது.
திருப்பூர் ஐயப்ப சுவாமி கோவிலில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஐயப்பன் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, சபரிமலை சென்றுவர தேவையான வழிகாட்டுதலை பெறலாம்.
மாலை அணிந்த பக்தர்கள், ஐயப்ப சுவாமி கோவில், விநாயகர் கோவில்களில் இரவு தங்குகின்றனர். தினமும் படி பூஜை, ஐயப்ப பஜனை வழிபாடு செய்கின்றனர்.
முதன்முதலாக மாலை அணிந்த பக்தர்கள், வீட்டில் கன்னி பூஜை நடத்தி அன்னதானம் செய்வது வழக்கம். திருப்பூர் ஐயப்பன் கோவிலில், மண்டலாபிேஷக பூஜையும் துவங்கியுள்ள நிலையில், அழகிய தேர் போல் கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலை துவங்கி காலை, 10:00 மணி வரை, 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள், குருசாமிகளிடம் ஆசி பெற்று, குருசாமிகள் கையால் மாலை அணிந்து, விரதம் துவக்கினர். கோவில் வளாகத்தில், தினமும் ஐயப்ப சாஸ்தா பிரீதி வழிபாடும், சிறப்பு பூஜைகளும் துவங்கியுள்ளன.