ஸ்பெயின் தொழில்நுட்பத்தில் கீழடியில் அருங்காட்சியகம்
கீழடி: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடந்த இடங்களை, 50 லட்சம் ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகமாக அரசு மாற்றியது. ஆனால், கீழடி தவிர்த்து மற்ற இடங்களை பராமரிக்க முடியாமல் அப்படியே கைவிட்டு விட்டது.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட முதல், இரண்டு, மூன்றாம் கட்ட அகழாய்வு நடந்த இடங்கள் உட்பட தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்களான, 4.5 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடும் வழங்கி விட்டது.
இந்நிலையில், தமிழக அரசு, 15 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற டெண்டர் கோரியுள்ளது. இதுவரை தமிழகத்தில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமையாத நிலையில், கீழடியில் வைகை நதிக்கரை நாகரிகம் குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில் திறந்த வெளி அருங்காட்சியகம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் உள்ளிட்டோர் ஸ்பெயினில் நவீன தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அருங்காட்சியகம், பண்டைய கால பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் உள்ளிட்டவை குறித்து நேரில் ஆய்வு செய்து வந்துள்ளனர்.
அதன்படி, கீழடியிலும் திறந்த வெளி அருங்காட்சியகம் நவீன தொழில்நுட்பத்துடன் அமைய உள்ளது.