உரிய தவணையில் கடன் செலுத்தினால் வாழ்க்கை மேம்படும்: அமைச்சர் பேச்சு
பொங்கலுார்: அலகுமலை வேலன் மகாலில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது.
அமைச்சர் சாமிநாதன், 919 பயனாளிகளுக்கு, 13 கோடி ரூபாய்க்கான கடனுதவி வழங்கினார். அனைவரும் கூட்டுறவு வார விழா உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அமைச்சர் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை பதிவாளர் கட்டுப்பாட்டில், 182 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மூன்று நகர கூட்டுறவு வங்கிகள், ஒரு நகர கூட்டுறவு கடன் சங்கம், ஐந்து வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், ஒன்பது தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 22 பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட, 236 அமைப்புகள் செயல்படுகின்றன.
விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், சுய உதவி குழு கடன், விலை பொருட்கள் கடன் என பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகிறது. அரசு சலுகை வழங்கும் என்று இல்லாமல், வாங்கிய கடனை உரிய தவணையில் திருப்பிச் செலுத்தினால் உங்கள் வாழ்வு மேம்படும்.
தாய்ப்பால் எங்கு குறைகிறதோ அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் இருக்காது. சுற்றுச்சூழல், தண்ணீர், காற்று சுத்தமாக கிடைப்பதில்லை. அதற்கும் சேர்த்து திட்டம் போட வேண்டி உள்ளது. எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல மண், நல்ல காற்று, நல்ல நீரை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கயல்விழி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் ராமகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி பங்கேற்றனர்.