வாக்காளர் பட்டியல் திருத்தம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
திருப்பூர்: தெற்கு தொகுதியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முகாமை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
தேர்தல் கமிஷன் சார்பில், அனைத்து தொகுதிகளிலும், பூத் வாரியாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான சிறப்பு முகாம் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நேற்று துவங்கி, இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.அவ்வகையில், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் இம்முகாமை நடத்தினர்.
இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு படிவங்கள் பெறப்பட்டது.இம்முகாமை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள், தலைமை பொறியாளர் செல்வநாயகம், உதவிகமிஷனர் வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.