தென் மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது: சந்திரபாபு

1

புதுடில்லி: ''தென் மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மக்கள் தொகை மேலாண்மை குறித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,'' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.



டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மக்கள் தொகை மேலாண்மை என்றால் என்ன என்று மக்கள் கேட்கின்றனர். நீங்கள் ஐரோப்பிய நாடுகளையும், ஜப்பானையும், சீனாவையும் கூட பார்க்கிறீர்கள். எல்லா நாடுகளும் வயது தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்கின்றன.

ஆனால் நமக்கு, வரும் 2047 வரை, இது தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும், தென் மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது, எதிர்காலத்தில் நமக்கு பாதகமாக அமையும்.

தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் இளைஞர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். வசதியான வாழ்க்கை வாழும் அவர்கள் திருமணத்துக்கு பின் குழந்தை வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர்.

கணவன் - மனைவி இருவருக்கும் இரட்டிப்பு சம்பளம் கிடைப்பதால், மகிழ்ச்சியாக வாழ விரும்பும் அவர்கள், இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மனித குலத்துக்கு மிகப்பெரிய ஆபத்து.

எனவே, மக்கள்தொகை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை. நம் நாட்டின் மக்கள்தொகை 145 கோடியாக உள்ளது.

இதை 175 கோடியாக அதிகரிக்க செய்ய வேண்டும். வரும் ஆண்டுகளில், சேவை துறையில் மனித வளம் முக்கிய பங்கு வகிக்கும்.

மக்கள்தொகையை நிர்வகிக்க முடிந்தால், நம் நாட்டில் இருந்து 30 - 40 கோடி பேர் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்க முடியும்.

எதிர்காலத்தில் நம் நாட்டிற்கு மிகப்பெரிய சொத்தாக அமையவுள்ள மக்கள்தொகையை பெருக்க, மக்கள்தொகை மேலாண்மை குறித்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement