அதிகளவு ஆக்கிரமிப்பு: மாயமான நீர் வழிப்பாதை

பல்லடம்: பல்லடம் வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் வழியாக செல்லும் நீர் வழிப்பாதைகள், குளம் குட்டைகளை கடந்து, நொய்யல் நதியுடன் கலக்கின்றன. காலம் காலமாக உள்ள இது போன்ற நீர்வழிப்பாதைகள், ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், முறையாக பராமரிக்கப்படாததாலும், நாளடைவில் ஒவ்வொன்றாக மாயமாகி வருகின்றன.

பல்லடத்தை அடுத்த, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் வழியாக செல்லும் நீர் வழிப்பாதை, தொட்டியப்புச்சி கோவில், ஆறுமுத்தாம்பாளையம் வழியாக நொய்யல் வரை செல்கிறது. இந்த நீரோடை, புதர்கள் மண்டியும், ஆக்கிரமிப்புகளாலும் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக உள்ள தொட்டியப்புச்சி கோவில் பகுதியில் உள்ள நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் காரணமாக மாயமாகி உள்ளது.

அறிவொளி நகர் -- தொட்டியப்புச்சி கோவில் செல்லும் வழித்தடத்தில், தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒருபுறம், மழைநீர் அடித்துவரப்பட்டு குளம் போல் தேங்கி நிற்கிறது. பாலத்தின் மறுபுறம் ஓடை மாயமாகி சமவெளியாக மாறிவிட்டது. மேலும், இதன் தொடர்ச்சியாக, ஓடை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போனது. இதன் காரணமாக, பல்லடம் வட்டாரத்தில், பல மைல் துாரம் கடந்து வரும் நீர் ஓடை, ஆறுமுத்தாம்பாளையம் பகுதியுடன் முடிந்து விடுகிறது. பெரு வெள்ளம் ஏற்பட்டால், மழை நீரால் தரைமட்ட பாலம் மூழ்குவதுடன், அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் செல்லும் அபாயம் உள்ளது.

மேலும், எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நீர் ஆதாரங்களை மீட்க வேண்டியது அவசியம். அவ்வகையில், ஆக்கிரமிப்புகள் காரணமாக, மாயமான இந்த நீர்வழிப்பாதையை மீட்டெடுத்து, மழைநீர் தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் இப்படி ஒரு நீரோடை இருந்ததற்கான அடையாளமே இல்லாத அவலம் ஏற்பட்டுவிடும்.

Advertisement