3 செகண்ட் வீடியோவுக்கு ரூ.10 கோடி கேட்பதா? தனுஷ் அனுப்பிய நோட்டீசால் நயன்தாரா ஆவேசம்!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா நடித்த, நானும் ரவுடி தான் படத்தின் போது, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்படத்தை, நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம், 2022ல் நடந்தது. அதை ஆவணப்படமாக தயாரித்து, 'நயன்தாரா: தேவதை கதைக்கு அப்பால்' என்ற பெயரில், ஓ.டி.டி., தளமான 'நெட்பிளிக்ஸில்' நாளை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். அதற்கான முன்னோட்டம், 9ம் தேதி வெளியானது.
அதில், நானும் ரவுடி தான் படக்காட்சிகள் ஒலிப்பதிவு இல்லாமல் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், 'திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, ஆவணப்படம் வெளியாவதற்கு, தனுஷ் தான் காரணம்' என, நயன்தாரா காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடின உழைப்பு
அவரது அறிக்கை:
சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல், தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும், இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன்.
'நயன்தாரா: தேவதை கதைக்கு அப்பால்' என்ற ஆவணப்படத்தை, என்னைப் போலவே, ஏராளமான என் ரசிகர்களும், நல விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால், நானும், என் கணவரும் மட்டுமின்றி, ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.
காதல், திருமணம் உள்ளிட்ட, என் வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம் பெற்றுள்ள, இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த, நானும் ரவுடி தான் திரைப்படம் இல்லாததன் வலி, மிகவும் கொடுமையானது.
அப்படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற, இரண்டு ஆண்டுகளாக காத்திருந்தோம்.
எங்களின் எல்லா போராட்டங்களும், பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
அந்த திரைப்படத்தின் பாடல்கள், இன்றளவும் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள்.
ஆனால், அந்த வரிகளை கூட பயன்படுத்தக் கூடாது என்பது, எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது, உங்களை தவிர மற்ற அனைவருக்கும் புரியும்.
தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது, வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால், நிச்சயமாக ஏற்றுக் கொண்டிருப்பேன்.
ஆனால், என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களின் இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்திய, மூன்று வினாடி வீடியோவிற்கு எதிராக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணைய தளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு, 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்கப்பட்டது மிகவும் விநோதமானது.
கீழ்த்தரமான இந்தச் செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதை போல், 1 சதவீதம் கூட, உங்களால் நடந்து கொள்ள முடியாது என்பதை நானும், என் கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.
வெற்று வார்த்தை
சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை எதிர்கொள்ள, நாங்களும் தயாராகவே இருக்கிறோம். படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும், தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்புரிமை காரணங்களை, நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள்.
ஆனால், கடவுள் மன்றத்தில், நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும், 'அன்பை பரப்புங்கள்' என்பதை, வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒரு முறையாவது, வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என, இனி நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், நயன்தாராவுக்கு ஆதரவாக, ஸ்ருதிஹாசன், பார்வதி, நஸ்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனுஷ் ஜோடியாக நடித்தவர்கள்.அதேபோல், 'தனுஷ் செய்தது சரியே' என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, 'நயன்தாரா அவரது திருமணத்தை ஆவணப்படமாக உருவாக்கி, 25 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுள்ளார். அவர் இலவசமாக வழங்கி இருந்தால், தனுஷ் எதுவும் கேட்கப் போவதில்லை. வியாபார ரீதியாக ஒரு படத்தை பயன்படுத்த முன்வரும் போது, அதன் தயாரிப்பாளர் என்ற முறையில் கேட்கத் தானே செய்வார்' என, கருத்து தெரிவித்து வருகின்றனர்.