அன்று... ராணுவ பீரங்கிப்படை வீரர்: இன்று... கல்லுாரியில் இளநிலை உதவியாளர்
கால்களில் செருப்பு கூட அணியாமல், ஆஜானுபாகுவான நபர் ஒருவர், கையில் பையுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அவரை பார்த்த போது, 'நான் முன்னாள் படைவீரர் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தேன்,' என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 42. முன்னாள் ராணுவ வீரரான இவர், சர்வீஸ் முடிந்து வந்து, குரூப்-4 எழுதி, தற்போது அரசு பணியாளராக இருக்கிறார்.
'கடந்த, 2002 முதல், 2019ம் ஆண்டு வரை, பீரங்கிப்படையில் இருந்தேன்... மொத்த சர்வீஸ் 17 ஆண்டுகள் மட்டும் தான்.
2019ல் விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்தேன். 2020ல் நடந்த, அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் -4 தேர்வு எழுதினேன்; எளிதாக தேர்ச்சியானேன். போடியில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில், இளம் உதவியாளராக பணியாற்றி வருகிறேன்.
முன்னாள் படைவீரர் என்ற முறையில் எனக்கு பென்சன் வருகிறது; ஓய்வூதிய அட்டையில், எனது மனைவி பெயர் தவறாக இருக்கிறது.
அதனை திருத்தம் செய்ய திருப்பூர் வந்தேன். நாட்டுக்காக தனது வாழ்க்கை முழுவதும் பாடுபட்ட முன்னாள் ராணுவத்தினருக்கும், ஏராளமான குறைகள் இருக்கின்றன. குறிப்பாக, பென்சன் பெறுவதில் உள்ள குறைபாடுகளை தீர்த்து வைக்க, சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
ராணுவத்தில் இருந்தவரை ஷூ அணிவேன். காலணி அணியாமல் நடந்தால் உடலுக்கு பல்வகை நன்மை கிடைக்கும். ஓய்வு பெற்ற பிறகு, காலணி எதுவும் அணிவதில்லை... எந்த வேலையாக இருந்தாலும் சரி, இன்றைய இளைஞர்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்' என்று தன்னைப்பற்றி அடக்கமாக கூறினார்.
தாய் மண்ணை காக்க பீரங்கிப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த ராணுவ வீரருக்கு, 'சல்யூட்' அடித்து மரியாதை செய்துவிட்டு, விடைபெற்றோம்.