மக்களை வாட்டி வதைக்கும் வரி வேண்டாம்! வலி இல்லாத வரியே போதுமானது

தமிழக அரசின் சில கொள்கை முடிவுகள் மக்களை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியினர் கூறி வரும் நிலையில், 'பொதுமக்கள் வாயிலாக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் வாயிலாக, கோரிக்கைக்கு தீர்வு காண முடியும்' என்ற 'அஜன்டா'வை கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.மாநிலத்தில் சொத்து வரி உயர்வு; குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்தாவிட்டால், ஒரு சதவீதம் அபராத வரி; தொழில் வரி உயர்வு; தொழில் உரிமக்கட்டணம் உயர்வு; கட்டட அனுமதி கட்டணம் உயர்வு; குப்பை அபராதம் உயர்வு; கொசு வளர்ப்பு அபராதம் என அத்தனை கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது.


இதற்கு தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட, எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வரி உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூண்டி நகராட்சி, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.--சுமை தரும் வரி
அரசின் வரி வருவாயை பெருக்க, வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் உயர்த்துவது அவசியம் தான்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால் ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு என்பதும், அபராத சாதாரண, நடுத்தர மக்களை, குறிப்பாக, வாடகை வீடுகளில் குடியிருப்போரை வெகுவாக பாதிக்கும். மக்களை வாட்டி வதைக்காத வகையில் வரி உயர்வு இருக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள், நிதி நெருக்கடியால் உள்ளாட்சிகள் திணறுகின்றன. கேரளாவில் அரசின் மொத்த வருவாயில், 30 சதவீதம் உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது; அத்தகைய நிலை தமிழகத்திலும் வர வேண்டும்.

- சுப்ரமணியம்

பூண்டி நகராட்சி

மா.கம்யூ., கவுன்சிலர்

---

ஏற்புடையது அல்ல...

வரி விதிப்பு உள்ளிட்ட நிர்வாக கட்டமைப்பு, ஆட்சி மாறினாலும், மாறாமல் இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு வரி வருவாய் என்பது முக்கியம். 2,3 ஆண்டு இடைவெளியில் சீரான இடைவெளியில் மக்களை வருத்தாத வகையில், வரி உயர்த்த வேண்டும். ஆனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரி உயர்த்தாமல், ஒட்டு மொத்தமாக மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் வகையில் வரி உயர்த்துவது ஏற்புடையது அல்ல. இது, அராஜகத்தின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.

- முருகானந்தம், திருமுருகன்பூண்டி.

--மறுபரிசீலனை அவசியம்

வரி உயர்வு என்பது அவசியம் தான் என்ற போதிலும், தற்போதைய வரி உயர்வு என்பது, பாமர, நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் வகையில் தான் இருக்கிறது. தற்போதைய மாநில அரசின் தொழில் வரி, சொத்து வரி விதிப்பை, மறு பரிசீலனை செய்ய வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, இந்த விஷயத்தை அணுக வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பாமர மக்களின் வாழ்க்கை, கடினமானதாகவே இருக்கிறது. மக்களின் வாழ்வாதரம், வருமானம் என்பது, ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஏற்ப மாறுபடும். அந்த மாவட்ட மக்களின் சராசரி வருமானத்துக்கு ஏற்ப வரி விதிப்பு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

- காதர்பாஷா

நுகர்வோர் சங்க தலைவர்

---



தொழில் வளம் பாழாகும்

ஏற்கனவே, திருப்பூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களும், பல்வேறு வரிச்சுமை மற்றும் மின்கட்டண உயர்வால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவங்கள் முடங்கியுள்ளன. உள்ளூர், வெளியூர் தொழிலாளர்கள் என, லட்சக்கணக்கானோர் தொழில் செய்யும் இடம் திருப்பூர். சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்ளுடன் ஒப்பிட்டு, வரி விதித்திருப்பது ஏற்புடையதல்ல. இதனால், தொழில் முனைவோர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இடம் பெயரும் சூழல் உருவாகியிருக்கிறது. கட்டட அனுமதி, சொத்து வரி, பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட பிற கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும். மறு சர்வே செய்து, மீண்டும் சொத்து வரி விதிக்கும் பணியை நிறுத்த வேண்டும்; மன்றக்கூட்டத்தில் இதுதொடர்பாக கருத்துக்கேட்க வேண்டும்.- அன்பகம் திருப்பதிதிருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர்

Advertisement