வரும் 23ல் துவங்கும் 'கோவை விழா'; களை கட்ட காத்திருக்கும் நிகழ்ச்சிகள்

கோவை: கோவை விழாவின் 17வது பதிப்பின் ஒரு பகுதியாக, 23ம் தேதி முதல் டிச., 1 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதில், 'ராஜ் மெலோடிஸ்' வழங்கும் பாடகி ஜொனிடாவின் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதுகுறித்து நிருபர்கள் சந்திப்பு, கோவை நவ இந்தியாவில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.

இதில், கோவை விழா தலைவர் அருண் கூறியதாவது:

கோவை விழா தினம், 24ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, 23ம் தேதி மாலை, கொடிசியா மைதானத்தில், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் துவக்க விழா நிகழ்ச்சியுடன், பாடகி ஜொனிடா இசை நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி காலை, நேரு ஸ்டேடியத்தில் இருந்து மராத்தான் நடத்தப்படும். அன்று மாலை, கோவை கிராஸ்கட் ரோடு சந்திப்பில் இருந்து ரோடு முடிவு வரை, கலாச்சார அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

வரும் 25ம் தேதி என்.ஜி.பி., கல்லுாரியில் பாரா விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 26ம் தேதி ஒருமைப் பயணம் நடத்தப்படும். 28ம் தேதி, கோவையில் செயல்படும் தேர்ந்த 'ஸ்டார்ட் அப்'களை தேர்வு செய்து, இவர்களுக்கு, 10 கோடி வரை 'பன்டிங்' வழங்கப்பட உள்ளது. சென்னை, பெங்களூருவை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். 30ம் தேதி, டிசம்பர் 1ம் தேதிகளில், கோவை கொடிசியாவில் மாலை உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. டிச., 1ல் நீலாம்பூர் பி.எஸ்.ஜி., கன்வென்சன் சென்டரில், கோவை விழா விருதுகள் வழங்கப்படும்; பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

துணை தலைவர் சவுமியா, 'ராஜ் மெலோடிஸ்' ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement