நுாலகங்கள் இருக்கு; புதிய நுால்கள் இல்லை அதிருப்தியில் இருக்காங்க வாசகர்கள்
கோவை: கோவையில் உள்ள அரசு நுாலகங்களுக்கு, 2022க்கு பின் புதிய நுால்கள் தருவிக்கப்படாததால், வாசகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில், முழு நேர நுாலகங்கள் மற்றும் பகுதி நேர நுாலகங்கள் என, 250 நுாலகங்கள் உள்ளன. இவற்றுக்கு தேவையான நுால்கள் ஆண்டுதோறும் தமிழக பொது நுாலகத்துறை மூலம், பதிப்பாளர்கள் மற்றும் பதிப்பகங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்படுகின்றன. கோவையில் உள்ள நுாலகங்ககளில் பழைய நுால்களே உள்ளன. புதிய நுால்களை வாசிக்கும் ஆர்வத்துடன் வரும் வாசகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., - யு.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்களுக்கு தனிப்பிரிவு செயல்படுகிறது. பொது அறிவு மற்றும் பாடம் வாரியாக உள்ள தேர்வு நுால்கள் குறைவாக உள்ளன. கூடுதல் தகவல்களுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட நுால்கள் இல்லை. போட்டித்தேர்வுக்கு படிப்பவர்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய நுாலகங்கள் கட்டுவதில் முனைப்புடன் செயல்படும் தமிழக அரசு, ஏற்கனவே செயல்பட்டு வரும் நுாலகங்களுக்கு தேவையான புதிய நுால்களை வாங்க வேண்டும்; பழைய நுாலகங்களை புதுப்பித்து, போதிய அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என, நுாலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட நுாலக ஆணைக் குழு அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில், ''கோவையில் உள்ள நுாலகங்களுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு புதிய நுால்கள் வாங்க, 2020-21 நிதியாண்டில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. 2022ல் அந்நுால்கள் நுாலகங்களுக்கு வந்து சேர்ந்தன. இப்போது நுால்கள் கொள்முதல் செய்வதில் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. இணையம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, துறை சார்ந்த நிபுணர்கள், படைப்பாளர்கள் மற்றும் வாசகர் வட்டங்கள் பரிந்துரைகள் மூலம் நுால்கள் தேர்வு செய்து வாங்கும் முறை பின்பற்றப்படுகிறது. கோவை மாவட்ட நுாலகங்களுக்கு தேவையான நுால்கள் விரைவில் வரும்,'' என்றார்.