'பிலாட்டீஸ்' உடற்பயிற்சி; அசத்தும் முதியவர்கள்
இந்தியாவில் வரும், 2050ம் ஆண்டுக்குள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் கணக்கீடு செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் முதியோர் நலன் சார்ந்த அமைப்புகள், பயிற்சி மையங்கள் மற்றும் அரசு திட்டங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.
கோவையில், 'பிலாட்டீஸ்' முறை உடற்பயிற்சியில் முதியோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அம்மையங்களில், 8 வயது முதல், முதியவர்கள் எந்த வயதுடையவருக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, 'ஒன் பாப் பிலாட்டீஸ்' மைய நிறுவனர் சஞ்சனா கூறியதாவது:
இந்தியாவில் தற்போது நடைபயிற்சி மட்டுமே முதியவர்களுக்கான உடற்பயிற்சி என்ற நிலை மாறி, பிலாட்டீஸ் பயிற்சியை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர். தொழில் நகரமான கோவையில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இங்கும் மையங்கள் துவங்கப்படுகின்றன.
முதியோர் மட்டுமின்றி குழந்தைகள், கர்ப்பிணிகளும் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். பொது மருத்துவர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டுதலின் படி, பிலாட்டீஸ் உடற்பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
பிலாட்டீஸ் உடற்பயிற்சியில் முதுகெலும்பை வலுப்படுத்துதல், கை, கால் மூட்டு வலியைக் குறைக்கும் பயிற்சிகள் மற்றும் தசைகளை இறுக்கமாக்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முதியோர் நலன் சார்ந்த இத்தகைய பயிற்சி மையங்கள் மேலை நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் இம்மையங்கள் தற்போது துவங்கப்பட்டு வரும் நிலையில், கோவையிலும் துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.