அழுவது பலவீனம் கிடையாது!
கூட்ட நெரிசலான பேருந்தில் இடைவிடாது சிறுவனின் அழுகை கேட்டுக்கொண்டே இருந்தது. தாயின் எந்த சமாதானமும் செல்லுபடியாகவில்லை. பொறுமையிழந்த தந்தை, 'எதுக்கு பொம்பள புள்ள மாதிரி அழுத்துகிட்டே இருக்கே... அழுறத நிறுத்து, இறங்கினதும் ரிமோட் கார் வாங்கி தரேன்' என, அதட்டினார்.
ஏன்... ஆண் குழந்தைகள் அழக்கூடாதா? பெண் வலிமையை பேசும் இதே சமூகம், ஒரு ஆண் அழுவதை இன்னும் பலவீனமாகவே பார்ப்பது... ஏன். 'ஆம்பள நீ அழக்கூடாது, 'பொண்ணு மாதிரி அழாதே', 'ஆம்பள மாதிரி நடந்துக்கோ' போன்றவற்றை அன்றாட உரையாடல்களிலும், திரைப்படங்களிலும் சாதாரணமாகவே கேட்கிறோம்.
சிறு வயது முதலே, ஆண் வலிமையானவன், கடினமானவன், அழக் கூடாது என ஆண் குழந்தைகளுக்கு சொல்லப்படுகிறது. இது, அவர்களது மனநலனில் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தும் என விளக்குகிறார், கே.எம்.சி.எச்., மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவர் நிவேதிதா...
'ஆம்பள பையன் அழக்கூடாது' போன்ற கருத்துகளை இன்றும் வீடுகளில் பெற்றோர் உபயோகிப்பதை பார்க்க முடிகிறது. இதுபோன்றவற்றை கேட்டு வளரும் குழந்தைகள், ஒரு ஆண் பிள்ளையாக நாம் சோகத்தையோ, கவலையோ வெளிப்படுத்தக்கூடாது என்ற முடிவுக்கு வருகின்றனர்.
இத்தகைய உணர்வுகள் பெண்களுக்கானவை என நம்புவதுடன், அழுவதை அவமானமாக பார்க்கிறார்கள். தங்கள் உணர்ச்சிகளை குழந்தைகள் அடக்கி வைப்பது காலப்போக்கில், மன அழுத்தமாக வளர்கிறது. மனச்சோர்வு போன்ற மனநலன் சார்ந்த பிரச்சனைக்கும் உள்ளாகின்றனர். அதனால், குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை அவர்கள் பொருத்தமாகக் கருதும் வழிகளில் வெளிப்படுத்த அனுமதிப்பதும், அதற்கு உதவுவதும் பெற்றோரின் கடமை.
சுய விழிப்புணர்வு
குழந்தைகளோ, பெரியவர்களோ தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள் குறித்து சுய விழிப்புணர்வு பெற்றிருப்பது முக்கியம். குழந்தையிடம் மகிழ்ச்சி, சோகம், குழப்பம், பயம், தனிமை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை விவரிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தத் துவங்குங்கள். உணர்ச்சிகள் குறித்து அடிக்கடி பேசுங்கள். உணர்ச்சிகளை பற்றி புரிந்துகொள்ளும் போது, தங்கள் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துவர்.
புரிதலோடு ஆறுதல்
பொம்மை உடைந்து விட்டது என அழும் குழந்தையிடம், 'இதற்கு யாராது அழுவார்களா' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. 'உனக்கு மிகவும் பிடித்த பொம்மை உடைந்தது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும்' என, ஆறுதலாக பேசுங்கள். குழந்தைகளின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என தெரியப்படுத்துங்கள். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தவறான விஷயம் இல்லை என குழந்தைகள் நம்புவர்.
உணர்ச்சி முதிர்ச்சி
உணர்ச்சி முதிர்ச்சி என்பது நம் உணர்ச்சிகளை அடக்குவது அல்ல; உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிப்பதும், சரியாக வெளிப்படுத்துவதும் ஆகும். பயமாகவோ, வருத்தமாகவோ இருக்கும் குழந்தையிடம், அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என கேளுங்கள். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களை ஊக்குவியுங்கள். உணர்ச்சியை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த கற்றுக்கொள்வது, முக்கியமான வாழ்க்கைத் திறனாகும். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது மனதாரச் சிரிப்பது எவ்வளவு சாதாரணமோ, சோகமாகவோ அல்லது வலியில் இருக்கும்போதோ அழுகையை வெளியிடுவதும் சாதாரணமானது. சிரிப்பும், அழுகையும் வெளிப்படுத்தும் வழிகளே தவிர, வலிமையின் அளவுகோல் அல்ல. ஆகவே, உங்கள் ஆண் குழந்தைகளிடம் சொல்லுங்கள், அழுவது பலவீனம் கிடையாது.
உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் குழந்தைகள், தங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு, அதன் மீது சுயகட்டுப்பாட்டை பெறுகின்றனர். கடினமான சூழலை எதிர்கொள்ளும்போது, உணர்ச்சிகளை எளிதாக நிர்வகித்து, பிரச்சனைகளை சமாளிப்பர். உணர்ச்சிகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவர். சுய உணர்வுகளை புரிந்துகொள்ளும் குழந்தைகள், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்து, மதிப்பளிப்பர். ஆழமான உறவுகளையும், நீடித்த நட்பையும் உருவாக்கிக் கொள்வர். மனநிலை மாற்றங்களையும் திறமையாக கையாள்வர். மன அழுத்தம் தரும் சூழல்களை வலிமையாக எதிர்கொள்வர்.