சிகிச்சை சரியில்லை என கூறவில்லை; போலீசில் டாக்டர் ஜாகிர் மோசஸ் புகார்
சென்னை: 'அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் தான், பிரேமாவின் உடல்நிலை மோசமடைந்ததாக நான் கூறவில்லை. என் மீது பழி சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், டாக்டர் ஜாகிர் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைமை டாக்டர் பாலாஜியை, விக்னேஷ் என்பவர், 13ம் தேதி கத்தியால் குத்தினார். அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் போலீசாரிடம்,''டாக்டர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்காதது தான், என் தாயின் நிலைக்கு காரணம். குறிப்பாக, அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால், தாயின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக, டாக்டர் ஜாகிர் மோசஸ் தெரிவித்தார்' என்று கூறியிருந்தார்.
இதேபோல, விக்னேஷின் தாய் பிரேமாவும், அவரது மற்றொரு மகன் லோகேஷ் ஆகியோரும், டாக்டர் ஜாகிர் மோசஸ் அவ்வாறு கூறியதாக தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், 'நான் அவ்வாறு கூறவில்லை; என் மீது பழி சுமத்திய பிரேமா, அவரது மகன் லோகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், டாக்டர் ஜாகிர் மோசஸ் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
என் தந்தையுடன் இணைந்து, 'ரூபன் மோசஸ் கிளினிக்' நடத்தி வருகிறேன். கடந்த ஜூலை 31ம் தேதி பிரேமா, நுரையீரல் சம்பந்தமாக, என்னிடம் சிகிச்சை பெற வந்தார்.
மூன்று முறை என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். மேல் சிகிச்சைக்காக, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தேன்.
ஆனால், அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால், உடல்நிலை மோசமடைந்தது என்று நான் கூறியதாக, அவர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.
அவ்வாறு நான் எதுவும் தெரிவிக்காத நிலையில், என்னை பற்றி தவறாக செய்தி பரப்பி வரும், பிரேமா, லோகேஷ் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகார் மனு குறித்து, கிண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.