கைத்தறி நெசவாளர் தறி கூலி பணமாக வழங்க வேண்டும்
அமைச்சரை சந்திக்க முடிவு
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்க நெசவாளர்களுக்கு கூலியை பணமாக மட்டும் வழங்க வேண்டும் என பெடரேசன் சார்பில் வேண்டுகோள் விடுத்து அமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களுக்கு தறி கூலியை ரொக்கமாக வழங்கிய நிலையில், காசோலையாக வழங்க 2023 செப்., மாதம் சென்னை கைத்தறி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது.
ஒவ்வொரு முறையும் குறைந்த கூலியை பெற்று நெசவுத்தொழில் செய்யும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பரமக்குடியில் உள்ளனர். இவர்கள் வங்கிகளுக்கு சென்று பணம் பெறுவது இயலாத காரியம்.
இதையடுத் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகம் முன்பு அக்.23ல் நெசவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் நேற்று பரமக்குடி எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர் உறுப்பினர்களின் பெடரேஷன் நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் சேஷய்யன் தலைமையில் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.26ல் சென்னையில் கைத்தறி அமைச்சர் காந்தி, கைத்தறி துறை அரசு செயலாளர், இயக்குனர் உள்ளிட்டோரை சந்தித்து மனு கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
செயலாளர்கள் கோதண்டராமன், ருக்மாங்கதன், துணைத் தலைவர்கள் கோவிந்தன், விஸ்வநாதன், நாகநாதன், துணைச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் கணேஷ் பாபு, நிர்வாகிகள் குப்புசாமி, குமார், பாஸ்கரன், முரளிதரன், நாகராஜன் கலந்து கொண்டனர்.